திருப்பூர், மே 2 -தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சதி நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மே 23 ஆம் தேதி மோடி ஆட்சி தோற்கடிக்கப்படும்போது, இங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.திருப்பூர் அரிசிக் கடை வீதியில் புதனன்று சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மே தின விழா சிறப்புப் பொதுக்கூட்டம் சிஐடியு நிர்வாகி டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது:தமிழகத்தில் போகிற போக்கைப் பார்த்தால் இடைத்தேர்தல் இல்லாத நிலையே இல்லை என்பது போல் இருக்கிறது. ஏற்கெனவே 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இப்போது சபாநாயகர் 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்டுப்பாட்டை மீறினால் அவரது பதவியைப் பறிக்க முடியாது. சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அரசு தீர்மானத்தை ஆதரிக்காமல் எதிர்த்து வாக்களித்தால்தான் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் அந்த கட்சியில் இருக்க முடியாது. சட்டமன்றத்துக்கு வெளியே என்ன செய்தாலும் அவரைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட அரசின் பட்ஜெட் அறிக்கையை ஆதரித்து வாக்களித்துள்ளனர். ஆனால் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் இருந்த 10 எம்எல்ஏக்களும் சேர்ந்து நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அரசின் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்தார். உயர்நீதிமன்றத்திலும் வாக்குமூலம் அளித்தார்.நேர்மையான சபாநாயகர் என்றால் அந்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் எம்எல்ஏக்களாக, ஓ.பி.எஸ். துணை முதல்வராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் முதலில் எதிர்த்து வாக்களித்துவிட்டு பிற்பாடு சமரசம் செய்து கொண்டாலும், 11 பேர் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்கினாலும் இவர்கள் ஆட்சி உடனடியாக கவிழ்ந்துவிடும் நிலை உள்ளது.பதவி நீக்கம் செய்ய வேண்டியவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆட்சியை நீடிக்க இப்போதே எதிர்ப்பு வாக்குகளைக் குறைக்க வேண்டும் என சதி நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மே 23க்குப் பிறகு இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை. மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்ற ஜனநாயக விரோத, சட்டமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கக்கூடிய காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக உழைப்பாளி மக்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.மத்தியிலும், மாநிலத்திலும் மாற்று ஆட்சி அமையப் போகும் மகத்தான மாதம்தான் இந்த மே மாதம். ஐந்தாண்டு கால ஆட்சியில் சாதனை என்று சொல்வதற்கு ஏதும் இல்லாத நிலையில் மோடி ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். எனவே இந்த ஆட்சி தோற்பது உறுதி. அதேசமயம் மோடிக்கு மாற்று வேறொரு ஜாடி அல்ல. ஆள் மாறுவதோ, கொடி மாறுவதோ மாற்றம் அல்ல. மாற்றுக் கொள்கையை உருவாக்கும் மகத்தான மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக செயல்படுவது வளர்ச்சி அல்ல. உழைப்பாளிகள் வாழ்வு வளம் பெறுவதுதான் உண்மையான வளர்ச்சி. தொழிலாளர், விவசாயிகள் மாற்றுத் திட்டத்தை உருவாக்குவோம். சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தும் பாஜக உள்ளிட்ட சக்திகளை முறியடித்து மாற்று வளர்ச்சித் திட்டத்தை உருவாக்குவோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.முன்னதாக இவ்விழாவில் ஏஐடியுசி சார்பில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம் தொழிலாளர் உரிமைகள் பறிப்பு நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கிக் கூறினார்.சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், ஏஐடியுசி சார்பில் ஜி.காளியப்பன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.முகமது ஜாபர், ஏஐபிஇஏ நி்ர்வாகி டி.மனோகரன், வடிவேல் உள்ளிட்டோர் பேசினர்.இந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.