புதுதில்லி:
சுதேசி தயாரிப்பு என்ற பெயரில், சாமியார் ராம்தேவினால் ஆரம்பிக்கப்பட்டதுதான், ‘பதஞ்சலி’ நிறுவனம். ஆரம்பத்தில் ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்பு என்று புறப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவு, அழகு சாதனப் பொருள்கள், சமையல் பொருட்கள் தயாரிப்பிலும் இறங்கியது.
அண்மையில் சிம் கார்டு, சோலார் பேனல், தண்ணீர் பாட்டில், செல்போன், ஜீன்ஸ் பேண்ட் விற்பனை யிலும் கால் பதித்தது.இதையொட்டி பேசிய ராம்தேவ், “பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளே இந்தியச் சந்தைகளை அதிகம் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அவற்றை இன்னும் ஐந்தாண்டுகளில் பதஞ்சலி வெளியேற்றும்” என்று ஜம்பம் அடித்தார். ராம்தேவ் அவ்வளவு ‘சுதேசி’ வெறிகொண்டவரா? என்று பலரும் ஆச்சரியப்பட்ட னர். தனது தயாரிப்புகளை அதிகளவில் விற்கவும், லாபத்தை அதிகரிக்கவுமே ராம்தேவ் ‘சுதேசி’ முழக்கம் போடுகிறார், இது நாடகம் என்று ஆரம்பத்திலேயே கண்டறிந்தவர்களும் இருக்கவே செய்தனர்.தற்போது, ராம்தேவ் அரங்கேற்றிய ‘சுதேசி’ நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், விரைவில் பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. “தங்கள் நிறுவனத்தின் மதிப்புக்கு முரண்படாத நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் தங்களுக்குத் தயக்கமில்லை; பன்னாட்டு நிறுவனங்கள் என்பதாலேயே அவற்றை ஒதுக்கத் தேவையில்லை” என்று பதஞ்சலி நிறுவனமும் முக்காடை முழுமையாக அகற்றியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.