tamilnadu

கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி வன்கொலை குற்றவாளி மீது தாக்குதல் - பொதுமக்கள் ஆவேசம்

கோவை, ஏப்.4-

கோவையில் 6 வயது சிறுமியை பாலியல்வன்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சந்தோஷ் குமாருக்கு வியாழனன்று கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை செய்வதற்காக சந்தோஷ் குமாரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை (பிரேத கிடங்கு) அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிந்து காவல்துறை வாகனத்தில் அவரை ஏற்றும்போது, சுற்றியிருந்த பொதுமக்கள் குற்றவாளி சந்தோஷ்குமாரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, காவல்துறையினர் சந்தோஷ்குமாரை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வேகவேகமாக அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.