tamilnadu

கோவை மற்றும் பொள்ளாச்சி முக்கிய செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு

கோவை, ஜூன் 3–தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையினால் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். பருவமழை காலங்களில் கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. மேலும், நீலகிரி, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். இதனால், காய்ச்சலுக்கு என 20 படுக்கை வசதி கொண்ட தனி சிறப்பு வார்டு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் கூறுகையில், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் நோயாளிகள் அருகில் உள்ள அரசுமருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தான் மருந்து,மாத்திரைகளை சாப்பிட வேண்டும். பருவமழை காலததில்காய்ச்சல் பாதிப்பினால் அரசு மருத்துவமனைக்கு வரும்நோயாளிகளுக்கு சிறப்பு வார்டு ஏற்படுத்தி, தனிக் கவனம்எடுத்து சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைக்கப்படும் என்றார்.

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றித்தர கோரிய பொதுமக்களை ஏளனம் செய்த மின் வாரிய அதிகாரிகள்

பொள்ளாச்சி,  ஜுன் 3- வேட்டைக்காரன் புதூரில்  பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றக்கோரி மனு அளித்த பொதுமக்களை மின்வாரிய உதவி பொறியாளர் ஏளனம் செய்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலூகா வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி தெற்கு மேட்டுத் தெருவில் 100 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்றில்கான்க்ரீட் சேதமடைந்துள்ளது. கம்பிகள் இற்று எந்த நேரமும் வீழும் நிலையில் உள்ளது. இதனால் வலுவிழந்து சாயும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள மக்களின்உயிருக்கே ஆபத்தாகவும், வீடுகளுக்கு சேதமும் ஏற்படலாம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வேட்டைக்காரன் புதூர் மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளரைச் சந்தித்து  பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றக்கோரி தெற்கு மேட்டுத் தெருபொதுமக்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மின் வாரிய அலுவலரோ  பொதுமக்களே அதை சரிசெய்து கொள்ளுங்களேன் என ஏளனமாக பதிலளித்துள்ளார். பொறுப்புள்ள அதிகாரி மக்களுக்கான பணியினைச் செய்யாமல் மாறாக குறைகளைத் தெரிவிக்கும் மக்களை ஏளனம் செய்வது கடும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர் அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஏளனமாகப் பேசிய பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.