உடுமலை, மார்ச் 30-
பொள்ளாச்சியில் தேங்காய்நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலுக்கான வாய்ப்புகள் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கு.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும்விவசாயிகள், சிறுபான்மையினர் மற்றும்ஏழை, எளியவர்கள் மீது அக்கறையின்றி நடந்து கொள்கிறது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகின்றது. இந்த அவலநிலையை எதிர்த்துப் போராடவும், மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றவும் திமுக பாடுபடும். திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மேலும், இங்கு தேங்காய்நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலுக்கான வாய்ப்புகள் பெருக்கப்படும். தென்னை நார் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆனைமலையாறு- நல்லாறு பாசனத்திட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். இதன்மூலம் கொங்குப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள். ஆகவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.