tamilnadu

img

மாற்றம் வேண்டும், நல்ல ஆட்சி வரணும்...

மகேஸ்வரி(குடும்ப தலைவி)


கேபிள் டிவிக்கு எல்லாம் ஜிஎஸ்டி போடறாங்க. தண்ணீர் 10 நாளைக்கு ஒரு முறை தான் வருகிறது. உப்பு தண்ணியும் தொடர்ந்து வருவதில்லை. சாக்கடைவசதி சரியாக இல்லை. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, முதியோருக்கும் இந்த நாட்டில் பாதுகாப்பில்லை. அரசாங்கம் இக்குற்றவாளிகளை கண்டிக்க வேண்டும். கண்டிப்பாக ஆட்சி மாறணும். 


மோகன் (மாணவன்) 


பொள்ளாச்சியில மிகப்பெரிய அளவுல பாலியல் வன்கொடுமைகள் நடந்தன. ஆனால் இதைப்பற்றி மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியோ, மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசோ செவி சாய்க்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களை காவல் துறையினர் கடுமையாக தாக்கினர் . போராடியவர்களில் தனியார் கல்லூரி மாணவனான நானும் ஒருவன்.ஆகவே, அவர்களுக்கு எங்களது வாக்கு இல்லை என்பது மட்டும் உறுதி . இன்னொரு கொடுமை பொள்ளாச்சி பகுதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்கு அதிக அளவிலான இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி, மதக்கலவரங்களை தூண்டும் வேலைகளில் ஆர்,எஸ்.எஸ்.அமைப்பினர் ஈடுபடுகின்றனர். எனவே. இம்முறை மக்கள் விரோத ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் நிச்சயம் வராது. இதற்காகவே இளைஞர்கள் அனைவரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம் என்கிறார்.


பிரம்மையா (மளிகைகடைக்கார


35 வருசமாக மளிகைக்கடை நடத்தி வருகிறேன். எல்லாத்துக்கும் லஞ்சம். கவர்மென்ட் டாக்டராக போஸ்டிங் போடனும்னா ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்கணுமாம். பேராசிரியர் வேலைக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்கணுமாம். இப்படி படிச்சவன் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு போக முடியுது. எல்லாரும் சுயநலவாதிகளா ஆயிட்டாங்க. மருத்துவமும், கல்வியும் இலவசமாகக் கிடைக்கணும். அப்பதான் சுதந்திரம் வாங்கினதா அர்த்தம்.


பழனிசாமி (கிளி ஜோசியர்)


ஆளுங்கட்சிக்காரன் தான். அதன் கூட்டணி கட்சிக்கு தான் சப்போர்ட் செய்யணும். ஆனாலும் எந்த கவர்மென்ட் வந்தாலும் நாங்க கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கோம். முதியோர் ஓய்வூதியமும் கிடைக்கல. ஊனமுற்றோர் உதவித் தொகையும் கிடைக்கல. நிலை இல்லாத வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம். பிச்சை எடுக்கற மாதிரி இருக்குது பொழப்பு. தேர்தல் வேலைக்கு போறவங்களுக்கு 500 ரூபாய் கூலிங்கறாங்க. ஆனால் முன்னாடி இருக்கறவன் 300 எடுத்துக்கிட்டு 200 தான் தர்றாங்க என்றவரிடம், நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.பி பெயர் கேட்டபோது, பெயர் என்னவென்று தெரியவில்லை. வேறு யாரெல்லாம் தேர்தல நிக்கிறாங்க என்றபோது, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பெயரை மட்டும் தான் கூறினார்.


கிரிதரன் , பிரகாஷ்(கல்லூரி மாணவர்கள்


நான் விவசாய குடும்பத்து பசங்க. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியமில்லை. 15லட்ச ரூபாய் பேங்க் அக்கவுண்டல போடறேன்னாங்க. ஆனால் எல்லாம் பொய். இந்த முறை பொய் பேசாதவங்க ஆட்சிக்கு வரணும். கொடுத்த வாக்கை காப்பாத்தணும். 


மேரி புஷ்பம்


கேபிள் டிவிய நெனச்சா ரொம்ப அநியாயமா இருக்கு. 250 ரூபாய் கேட்கறாங்க. எப்பவும் இவ்வளவு மோசமில்லை. விலைவாசிய குறைக்கணும்.


ஜமீலா


இந்த அரசில் எந்த பாதுகாப்பும் இல்லை. குடிக்கும் தண்ணீரைக் கூட தனியாருக்கு வித்துட்டாங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவர் பி.ஆர்.நடராஜனும், கம்யூனிஸ்ட் கட்சியினரும்தான். ஊழலற்ற, அமைதியான, நல்ல ஆட்சி வரணும். மாற்றம் வேண்டும். 


மேரி


பெண்களுக்கு சுதந்திரம் இல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்ல. பணத்துக்கு மதிப்பு இல்லை. நடுத்தர மக்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. கீழயும் போக முடியல. மேலயும் போக முடியல. தண்ணீருக்கு ரொம்ப கஷ்டப்படுகிறோம். விடிய விடிய ஆளுக்கொரு குடம் பிடிக்கிறோம். 


ஷேக் பழைய இரும்பு வியாபாரி)


ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரணும். இந்த அரசால் எந்த நல்லதும் நடக்கவில்லை. ஜிஎஸ்டியால 200 ரூபாய் பொருளுக்கு 250 கொடுக்க வேண்டியிருக்கிறது. எனக்கு 60 வயதாகிவிட்டது. இப்படியொரு மோசமான ஆட்சியை பாத்ததில்லை. 15 லட்ச ரூபாய் போடறேன்னு சொன்னாரு. போடலை. 400 ரூபாய்க்கு விற்ற கேஸ் இன்னிக்கு 900 ரூபாய் ஆக ஏறிவிட்டது. தமிழ்நாட்டுல அம்மா இருக்குற வரை ஆட்சி நல்லா இருந்தது. இப்ப அவங்கள காப்பாத்திக்கவே அவங்களால முடியாம இருக்கிறாங்க. 


ஹாஜா உசேன்


மத்திய, மாநில அரசுகளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. இவை மக்களுக்கான அரசாக இல்லை. மக்கள் நலனுக்கு எதிரான அரசான திட்டங்களை திணிக்கக் கூடிய அரசுகளாக உள்ளன. உதாரணமாக, ஸ்டெர்லைட், நீட் போன்ற விசயங்களை சொல்லலாம். பல்வேறு மொழி, மதங்கள், இனம் கொண்ட அதிசயமான நாடு நம் நாடு. மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்கின்றனர். பிளவுபடுத்தும் தத்துவம் இனி வரக்கூடிய சந்ததிகளையும் பாதிக்கும். எனவே இந்த அரசு அகற்றப்பட வேண்டும். இதற்கு மாற்று வர வேண்டும். 


முஸ்ரா


2 குழந்தைகள், தங்கச்சிகள் இருக்காங்க. நாட்டு நடப்புகள் பயத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாம போச்சு


சல்மா


என் பேத்திக்கு 7 வயசாகுது. பக்கத்து தெருவில இருக்கிற வீட்டுக்கு தனியா அனுப்ப பயமா இருக்கு. நான் கொண்டு போய் விட்டுட்டுதான் வருகிறேன். பாதுகாப்பு இல்லை. டிவில வர்ற செய்தியப் பாத்தா ரொம்ப பயமா இருக்கு. இப்ப எல்லாம் முஸ்லிம் குழந்தைகள் நல்லா படிக்கிறாங்க. இருந்தாலும் வேலை கிடைக்கறதில்லை. சான்றிதழ்களுடன் வேலை கேட்டு போனால் லஞ்சம் எதிர்பார்க்கின்றனர்.


கமருன்னிசா


மோடி அரசில பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல. மக்களுக்கும் பாதுகாப்பில்ல. ஒரு வயசு, இரண்டு வயசு குழந்தைகளுல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். தட்டிக் கேட்க முடியவில்லை. குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மீண்டும் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லாட்சி வரவேண்டும். மோடி ஆட்சியில் என்ன செய்தார்கள்? வெறும் துக்கம், சங்கடம், கஷ்டமும், அழுகையும் தான் மிச்சம். 


ஹசீனா


பாலியல் பலாத்காரம், கொலை போன்றவை சாதாரணமாக நடக்கின்றன. பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. பணத்தட்டுப்பாடு பயமா இருக்கு. டிவிபாக்கறதவே நிறுத்திட்டோம். 300 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்று 900க்கு மேல போயிருச்சு. மானியம்னாங்க. அதுவும் கிடைக்கறதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தா நல்லாயிருக்கும்.


முருகன் (இளநீர் விற்பனையாளர்)


பிரதமர் மோடி 2014 ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்தார். அதை நம்பி ஓட்டும் போட்டோம். ஆனா அந்த 15 லட்சமும் வரல, எடப்பாடி அறிவித்த 2000 ரூபாயும் வரல, அதுக்கு பதிலாக எங்களை பண மதிப்பிழப்புனு அலைய வச்சது தான் மிச்சம். அப்புறம். இந்த பெட்ரோல் விலை உயர்வால் எங்க வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. முன்னாடியெல்லாம் 1 லிட்டர் பெட்ரோல் அடிச்சா பொள்ளாச்சியில இருந்து சூலக்கல் வரைக்கும் விற்பனைக்காக போயிட்டு வருவோம் , ஆனா, இப்போ ஒன்னரை லிட்டர் பெட்ரோல் தேவைப்படுது. இதுக்கு மத்திய அரசாங்கம் வாயே திறக்கமாட்டீங்குது. இதனால் எங்களுக்கு கூடுதல் சுமைதான் ஏற்படுது.மேலும்,.எங்கள் பாரத்தை குறைக்க நிச்சயம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். தொழிலாளர்களின் நிலைமையை உணரும் கட்சியே எங்களுக்கு வேண்டும். ஏமாற்றுப் பேர்வழிகளின் கட்சிகள் வேண்டாம்.



தறிகளை விற்பதை விட உடைப்பதே லாபம் குமுறும் விசைத்தறி உரிமையாளர்


மோடி ஆட்சியில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசைத்தறி தொழில் கயலான்கடை வாசலில் நிற்கிறது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் பேசியபோது, வேட்டி நெசவு செய்து வருகிறோம். இதற்குமுன்பு காடா துணி நெய்து வந்தோம். உற்பத்தியாளர்களிடம் பாவு வாங்கி கூலிக்கு நெசவு செய்து கொடுக்கிறோம். தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை. பாவு தர மாட்டேங்கறாங்க. கேட்டா நூல்விலை உயர்வு. சரக்கு போக மாட்டேங்குதுங்கறாங்க. இதனால்தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை. கட்டுப்படியான கூலி இல்லை. எனினும் தொழில விட முடியாம கிடைக்கற கூலிக்கு ஓட்டிட்டு இருக்கிறோம். 60 இன்ச் புது தறியின் விலை சுமார் ரூ.50 ஆயிரம்மற்றும் கரன்ட் பில் கட்டி, இடத்து வாடகை கொடுத்து, பராமரிப்பு செலவு செய்து, போட்ட முதலுக்கு வட்டி கட்டி அதற்கு மேல் கூலி எடுக்க முடியாமல் கடனாளியாவதை விட விற்பதே மேல் என்ற நிலைவந்துவிட்டது. அதுவும், பழைய தறிகளை அப்படியே விற்கும்போது 10 ஆயிரம், 20 ஆயிரத்திற்கு மேல் போகாது.இதனால் சுமார் 1 டன் எடையுள்ள தறியை உடைத்து எடைக்குப்போடும்போதுகிலோவிற்கு ரூ.30,35 வீதம்கூடுதலாக விலை கிடைக்கிறது என்கிறார். ஆம், விசைத்தறி தொழிலை இந்த நிலைக்கு ஆளாக்கிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர விடலாமா!


தனபால் 


ஜிஎஸ்டி போட்டப்புறம் எல்லா விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சு. பஸ் டிக்கெட் ஏத்திட்டாங்க. பெட்ரோல், டீசல் விலை ஏறிட்டே இருக்குது. இதனால் எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க. இந்த நிலைமை மாறணும். தொழிலாளிகளோட கஷ்டத்த புரிஞ்சிக்கறவங்க ஆட்சிக்கு வரணும். 


ஆட்டோ பாண்டியன்


5வருசத்துக்கு முன்பு புது ஆட்டோ விலை ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.6000. டீசல் விலை 56 ரூபாய். அன்னிக்கும் மினிமம் வாடகை ரூபாய் 30 தான். இன்னிக்கு ஆட்டோ விலை ரூ. ரூ.3 லட்சம். இன்சூரன்ஸ் ரூ.10 ஆயிரம், எப்சிக்கு ரூ.20 ஆயிரமாகுது. டீசல் விலை ரூ.80. பர்மிட்டுக்கு ரூ.5000. இதுல ஓலா, உபேர்னு வந்தப்புறம் வாடகையும் குறைஞ்சு போச்சு. இதுதான் என்னமாதிரி ஆட்டோ தொழிலாளியின் நிலைமை. எப்படி வாழறது இந்த ஆட்சியில்.


அன்பரசி (மளிகை கடை)


நாங்கள்லாம் நடுத்தர மக்கள். இப்ப கேஸ் வாங்க முழுசா 1000ருபாய் வேண்டும். நாங்க சொந்த வீட்டுக்காரங்க. ஆனாலும் 2 பேர் சம்பாதிச்சா தான் வாழ முடியும்ங்கற நிலைமை வந்திருச்சு. ஸ்கூல் பீஸ் விசயத்தில் அரசு ஏன் தலையிடுவதேயில்லை? எங்க பசங்க மெடிக்கல் படிக்க ஆசைப்படறாங்க. ஆனா நீட் வந்திருக்கு. இது அவசியமேயில்லை. இதுக்கு காரணமான ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை. எங்க வீட்டுக்காரர் ஆளுங்கட்சிக்காரர்தான். இருந்தாலும் இந்த முறை அவங்களுக்கு நான் ஓட்டு போட மாட்டேன்.


அன்னபூரணி


எங்களுக்கு சொந்தமா வீடு இருக்கு. எங்க வீட்டுகாரருக்கு தினம் ரூ.500, 600ன்னு சம்பளம் வரும். அதுமட்டும் குடும்பம் நடத்த பத்தலனு சின்ன கடை வச்சிருக்கேன். இரண்டு பேரும் சம்பாதிச்சா தான் குடும்பம் நடத்த முடியுது. இப்ப அரசி மாவு விக்க கூடாது, தோசை மாவு விக்க கூடாது, அது விக்க கூடாது, இது விக்க கூடாதுங்கறாங்க. ஒரு ரூ.5000, 6000க்கு பொருள் வாங்கி போட்டா கூட 400, 500 கிடைக்கும். அத கெடுத்திட்டாங்க. சேத்து வச்சிருந்த காசு செல்லாதுன்னுட்டாங்க. அன்றிலிருந்து இன்னும் சரியாகவில்லை. நடுத்தர குடும்பங்களின் நிலைமையே இப்படின்னா, அதுக்கும் கீழே இருக்கிற தொழிலாளிகளொட நிலமை எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.


ஷாகிதா


என் தம்பிக்கு கல்யாணம் வச்சிருந்தோம். அதுக்காக 7.5 பவுன் நகையை வித்திட்டேன். அந்த பணத்தை பேங்க்ல போட்டேன். அடுத்த நாள் நைட்டு டிவில செய்தி வருது. 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னுட்டாங்க. அப்பறம் 2000, 2000 மா வரிசையில நின்னு ஒரு மாதம் எடுத்தோம். ரொம்ப கஷ்டமாயிருச்சு. இதனால் கல்யாணமும் தள்ளிப் போயிருச்சு.


ஜிஎஸ்டி= தொழில் மூடல், வேலை பறிப்பு


ஜிஎஸ்டியால் சிறு குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இது தொடர்பாக வரி ஆலோசகர் சுப்ரமணியம் என்பவரிடம் கேட்டபோது, எந்த நிறுவனமும் எல்லா பொருள்களையும் அவர்களே தயாரிப்பதில்லை. பொருள்களின் சிறு சிறு பாகங்களை ஜாப் ஒர்க் என்ற பெயரில்வெளியில் செய்து பெறுகின்றனர். இந்த வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அன்று வரி இல்லை. பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டியில் இந்த பிரிவினருக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. பல்வேறு முறையிடல்களுக்குப் பிறகு 28 சதவிகிதத்திலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. இப்போது ஆண்டிற்கு ரூ.40லட்சம் வரை விற்பனை செய்பவர்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் சிறு, குறு தொழில் செய்வோர் ஜிஎஸ்டி எண் பெற தேவையில்லை. ஆனால் ஜிஎஸ்டி பெறாததொழிற்கூடங்களுக்கு பெரு நிறுவனங்கள் (ஜாப் ஒர்க்) வேலை கொடுப்பதில்லை. எனவே குறு, சிறுதொழில் செய்து வரும் தொழிற்கூடத்தினர் வேலை பெற வேறுவழியின்றி ஜிஎஸ்டி பெறுகின்றனர். இவ்வாறு ஜிஎஸ்டி எண் பெற்றவர்கள் மாதம் ஒரு முறை வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக ஆடிட்டர் ஒருவரை அமர்த்த வேண்டும். வேலையே இல்லை என்றாலும், கூலி பெறவில்லை என்றாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இப்பணி ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டும். வேலையே இல்லை என பேசாமல் இருக்கக் கூடாது. இவ்வாறு ஜிஎஸ்டி எண் பெற்ற அனைவரும் கட்டாயம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சில மாதங்கள் கடந்த பின்னர் கணக்கு தாக்கல் செய்யவில்லை, வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் வரும். 


எந்த பொருளுக்கு எவ்வளவு வரி எப்போது செலுத்த வேண்டும். என்னென்ன இணைக்க வேண்டும் போன்ற விபரங்களைத் தெரியாமல் குறு, சிறு உற்பத்தியாளர்கள் ஆடிட்டரைத் தேடி சென்றால் மாதம், அவருக்கு ஒரு தொகை ஊதியமாக நிர்ணயம் செய்வார். வரவு-செலவு கணக்கு 18 சதவிகித வரி மற்றும் அபராதத் தொகையாக பல ஆயிரங்களில் தொடங்கி லட்சக் கணக்கில் செலுத்த வேண்டிவரும். இந்நிலைக்கு ஆளான குறு,சிறு நிறுவனத்தினர் கடன் பெற்றுகணக்கை நேர் செய்தனர். நாளடைவில் கடன் அதிகரித்துக் கொண்டே செல்லும். இவ்வாறு கடன் படுவதைவிட தொழில் செய்யாமலிருந்தால் லாபம் என்ற நிலைஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தொழிற்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. இதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்றார். இந்த உண்மையை மறைக்க முடியாமல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் 50 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்றால் உண்மையில் அதன் மடங்கு அதிகமாக இருக்கும் என்பது வெளிச்சம். இதைக்கேட்கும்போது  ’கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து’என்ற குறள் நினைவுக்கு வருகிறது. அதாவது, அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் என்பது இதன் பொருளாகும். பல ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்படவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் செய்ய காரணமான கொடியவர்களைத் தண்டிக்கும் நாள் ஏப்ரல் 18.



தொகுப்பு: சக்திவேல், மணியாழன்.