திருப்பூர், மே 28 –திருப்பூர் மாவட்டம் கொடுவாய் சாரதா நகர் அருகே தலித் சமூகத்தினர் மீது சாதி ஆதிக்க வஞ்சத்துடன் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி கன்னத்தில் அறைந்த குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம் நசியனூர் தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (35) ஞாயிறன்று இரவு 9 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புவனேஸ்வரி தனது கணவர் சக்திவேலுடன், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அம்பேத்கர் நகரில் உள்ள தனது அண்ணன் சக்திவேல் குடும்பத்தாரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஞாயிறன்று மதியம் வந்துள்ளனர். தனது அண்ணி லட்சுமியிடம் நலம் விசாரித்துவிட்டு, புவனேஸ்வரி தனது கணவர் சக்திவேலுடன் இருசக்கர வாகனத்திலும், அவரது அண்ணன் சக்திவேல் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் புறப்பட்டு கொடுவாய் சாரதா நகர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் நிலை தடுமாறிய நிலையில் இருசக்கர வாகனங்களை கடந்து சென்று முன்னால் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.அந்த காரில் இருந்து இறங்கிய அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் பக்கத்தில் வந்து புவனேஸ்வரியின் அண்ணன் சக்திவேலை சாதியைச் சொல்லி திட்டி கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி தனது அண்ணனை அறைந்ததை எதிர்த்து நியாயம் கேட்டிருக்கிறார். பெண் என்றும் பார்க்காமல் சேகர் அவரையும் கன்னத்தில் அறைந்து சாதியைச் சொல்லி திட்டியிருக்கிறார்.இதையடுத்து புவனேஸ்வரி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் வந்து சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்திய சேகர் மீது புகார் அளித்திருக்கிறார். காவல் துறையினர் இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வது வரை காத்திருப்பது என்று முடிவு செய்து அங்கேயே காத்திருந்தனர். இந்நிலையில் இரவு 9 மணிக்கு மேல் காவல் ஆய்வாளர் கே.வசந்தாமணி மேற்படி புகார் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் கோரினர்.
குற்றவாளி கைது
மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி சேகரை கைது செய்ய வலியுறுத்தி, அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் திங்களன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச. நந்தகோபால், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜி. சம்பத், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா தேவி, ஆதித் தமிழர் சனநாயகப் பேரவை தலைவர் பவுத்தன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதையடுத்து அன்று மாலையில் குற்றவாளி சேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.