திருப்பூர், ஏப்.6-நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அஸ்ஸாம் செல்வதற்கு ரயில் பயணச்சீட்டு வைத்திருந்தும், ரயில் கதவுகள் திறக்கப்படாததால் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியாமல் போனது. இதனால் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனக்கூறி ரயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், திருப்பூரில் பணிபுரியும் அம்மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து வைத்திருந்தனர். வெள்ளியன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்து காத்திருந்தனர். கோவையில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி ரயில் நிலையத்திற்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விவேக் எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளியன்று திருப்பூருக்கு வந்தபோது அதன் கதவுகள் உள்பக்கம் அடைக்கப்பட்டு இருந்தது. முன்பதிவுப் பயணிகள் அதில் ஏறுவதற்காக கதவைத் திறக்க முயற்சித்தபோது கதவைத் திறக்க முடியவில்லை. சில நிமிடங்கள் நின்றுவிட்டு இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. முன்பதிவு பயணச்சீட்டு வைத்திருந்தும் ரயிலில் ஏற முடியாமல் பதற்றமடைந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு ரயிலை நிறுத்தக் கோரியும் எந்த பலனும் இல்லை. ரயில் புறப்பட்டுச் சென்றது.இதையடுத்து ரயில் நிலைய அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலில் செல்ல முடியாமல் போனதால் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இனி ஊருக்குச் செல்வதென்றால் அடுத்த வாரம்தான் செல்ல முடியும். அதுவும் நான்கு நாட்கள் பயணம் எனும்போது தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க முடியாது என்று ரயில் நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் ஆத்திரத்துடன் வாக்குவாதம் செய்தனர். எனினும் வேறு வழியின்றி அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.