கோவை, மே 2- அருந்ததியினர் மக்களுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்கருணாநிதி என்று சூலூர் பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.சூலூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக திமுகவின் பொங்கலூர் நா.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவரைஆதரித்து சூலூர் ஸ்லிப்பர் காலனியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் திமுகவின் கழக துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகருமான வி.பி.துரைசாமி அருந்ததியின மக்களிடத்தில் சென்ற வாக்குகளை சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது :- ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்தவர் கலைஞர். அனைத்து சலுகைகளும் பெற்று தந்தவர் கலைஞர். அருந்ததியினத்தின் இந்த மக்கள் வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, பொறியாளர்களாக வர வேண்டும் என 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் கட்டணம் குறைக்கப்படும். 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடனை கட்ட வேண்டாம். 10 ஆவது படித்த 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நல பணியாளர்கள் பணி வழங்கப்படும் என என ஏராளமான திட்டங்களை தி.மு.க. தலைவர் அறிவித்துள்ளார்கள். மேலும், கேட்காமலேயே இலவச அடுப்பு கேஸ் சிலிண்டர் வழங்கியவர் கலைஞர். இன்று ஒரு சிலிண்டரின் விலையை எடப்பாடியும், மோடியும் 1,300 ரூபாயாக உயர்த்தி விட்டனர். திமுக ஆட்சி வந்தவுடன் அதை பழைய விலைக்கே கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களை தேடி வர வேண்டும். அதற்கு அருந்ததியின சமுதாய மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொங்கலூர் நா.பழனிச்சாமி ஜெயிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதைத்தொடர்ந்து கண்ணம்பாளையம் பேரூராட்சி, பீடம்பள்ளி பேரூராட்சி பகுதியில் உள்ள அருந்ததியின மக்களிடத்தில் வாக்குகளை சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது, சூலூர் நகர செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.