கோவை, ஏப். 18-உதகைக்கு முறையாக அரசு பேருந்துகள் இயக்காததால் பயணிகள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.கோவையில் இருந்து உதகைக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வியாழனன்று காலை முதல் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து பயணிகள் கூறுகையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்துமட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். கோவையில் இருந்து உதகை செல்ல மூன்றரை மணிநேரம் ஆகும். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பேருந்து கிடைக்குமா என கேள்வி குறியாக உள்ளது. எனவே தங்களது வாக்குகளை பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினர். தனியார் வாகனங்களை அணுகினால் அதிகமான தொகை கேட்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
பொள்ளாச்சி
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வெளியூர்களில் பணியாற்றி வந்தவர்கள் தங்கள் சொந்தஊருக்கு திரும்பினர். கோவைமாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறை பகுதி வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழக்கமான பேருந்துகளைத் தவிர கூடுதலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வியாழனன்று அதிகாலை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஏராளமான வாக்காளர் பயணிகள் பேருந்தில் இடமின்றி காத்திருந்தனர். வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்துகள்நிரம்பி வழிந்தன. இதனால் அவற்றில் இடம் பிடிக்க முடியாமல் தவித்த வாக்காளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியாமல் போய்விடுமோ என அஞ்சினர். இதனால் வேறு வழியின்றி வியாழனன்று காலை மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்துபேருந்துகள் இயக்கப்பட்டன. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தைக்கைவிட்டு கூடுதலாக இயக்கப்பட்ட பேருந்துகளில் இடம் பிடித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற சென்றனர்.