tamilnadu

img

உதகை சிறப்பு மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

மேட்டுப்பாளையம், மே 11- உதகைக்கு இயக்கப்படும் கோடைக்கால சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கோடைக்கால விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மலைரயில் தவிர கூடுதலாக காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காரணமாக பலரும் மலைரயிலில் பயணிக்க பயணசீட்டு கிடைக்காமல் ஏமாற்றமடையும் சூழலே நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோடைக்கால சிறப்பு மலை ரயிலில் கூடுதலாக இருக்கைகளை சேர்க்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி சனிக்கிழமை முதல் கூடுதலாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலைரயிலில் உள்ள முதல் வகுப்பு இருக்கை எண்ணிக்கையினை 32 லிருந்து, 72 ஆக உயர்த்தியுள்ளது. இதற்காக 40 முதற்வகுப்பு இருக்கைகள் கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இம்மலை ரயிலுடன் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. இந்தகூடுதல் இருக்கை வசதி ஜீன் மாதம் 15 வரை நீடிக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.