tamilnadu

கோவையின் அமைதியை சீர்குலைத்த 4 பேர் கைது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கோவை, மார்ச் 19 -  கோவையில் சமீப காலமாக தொடர்ந்து இரு தரப்பின ருக்கிடையே தாக்குதல்  நடைபெற்று வருகிறது. இச்சம்ப வம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் 4 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துத்துவ  அமைப்பினரும்,  இஸ்லாமிய அமைப்பினரும்  குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இதனால் கோவை மாநகரம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிலவியது.  இதனிடையே,  கடந்த மார்ச் 4ஆம் தேதி  இந்து முன்னணியின் மாவட்டப் பொறுப்பாளர் ஆனந்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகர போலீசார் அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல், கடந்த 5ஆம் தேதி கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பைச் சேர்ந்த அகில், பாஜக-வைச் சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை  போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத் தனர்.  இந்நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான உத்தரவு சிறைத்துறைக்கு வழங்கப்பட்டது.