பொள்ளாச்சி, ஜூன் 6- பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்புபிடிபட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே மருத்துவர் மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தென்னை தோப்பு உள்ளது. இத்தோப்பில் 12 அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக வனத்துறைக்கு தோட்டத்து ஊழியர்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து பொள்ளாச்சி வனச்சரகர்காசிலிங்கம் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் தென்னை தோப்பிற்குச் சென்றனர். தோப்பில் தென்னை மட்டைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு சுருண்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதனைப் பத்திரமாகப் பிடித்தனர். இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், தற்பொழுது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனைத் தாங்காமல் மலைப்பாம்புகள் நீர் நிலைகள் உள்ள தோட்டங்களில் உணவு தேடி வருகின்றன. எனவே இதுபோன்று பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளில் வந்தால் உடனடியாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தர வேண்டும் என தெரிவித்தார். மேலும், பிடிபட்ட 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை நவமலை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் எனவும் தெரிவித்தார்.