கோவை, மே 2- சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், திமுக வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிசாமி, அதிமுக வேட்பாளர் கந்தசாமி, அமமுக வேட்பாளர் சுகுமார் உள்ளிட்ட 22பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளான வியாழனன்று எந்த வேட்பாளரும் வாபஸ் பெறவில்லை. இதனால், 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.