நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதனன்று வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அறைக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் ஆட்சியரின் அழைப்பிற்காக காத்திருந்தனர். அந்நேரம், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்க வந்தவர்களில் ஒருவர் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் மனைவி வனஜா நடராஜன். ஆட்சியர் அறையின் வாசலில் தனது கணவர் நிற்கிறார் என்பதைக்கூட கவனிக்காமல் சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு ஆட்சியரின் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றனர் வனஜா நடராஜன் உள்ளிட்ட மாதர் சங்கத்தினர். இதன்பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து கொண்டிருந்தனர் மாதர் சங்கத்தினர். அப்போது வேட்புமனு பரிசீலனையை முடித்துவிட்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெளியே வந்தார். அப்போதுதான் தனது கணவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை கண்டார் வனஜா நடராஜன். இதனையடுத்து ஓடிச்சென்று கணவரின் கழுத்தில் அணிந்திருந்த சிவப்பு துண்டை சரிசெய்து வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். இந்த காட்சியை கண்ட சக பத்திரிக்கையாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் மக்கள் போராளிகள்தானப்பா..வேட்பாளர் தேர்தல் களத்தில் நிற்கிறார். மனைவி, சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு மக்களோடு இணைந்து போராட்ட களத்தில் நிற்கிறார் என்றனர்.