ஆப்கானிஸ்தானில், 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை விட, ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் தான் அதிகம் என்றும் ஐ.நா புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் படையினருக்கு எதிராக அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் கொல்லப்பட்டவர் குறித்த புள்ளிவிவரத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தீவிரவாதிகளால் 631 பேர் கொல்லப்பட்டனர் என்றும், அதே சமயம், ஆப்கன் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 717 பேர் என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளை விலக்கிக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ஐ.நாவின் மேற்கூறிய புள்ளிவிவரத் தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யுனாமா என்றழைக்கப்படும் ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் உதவி மிஷன் வெளியிட்ட இந்த புள்ளிவிவரத் தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. ''போரில் ஈடுபடாத குடிமக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது' என்ற உறுதிப்பாட்டுடன் தங்கள் செயல்படுவதாக தெரிவித்த அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் தாக்குதல்களில் இறந்தவர்கள் குறித்த தங்களின் புள்ளிவிவரத் தகவல்கள் மிகவும் சரியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், தங்களின் ஆதார புள்ளிவிவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை.