சென்னை, ஏப். 14-ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் பாஜக- அதிமுக கூட்டணியை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வேண்டுகோள் விடுத்தார். மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து வில்லிவாக்கத்திலும் வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பெரம்பூரிலும் சனிக்கிழமை (ஏப். 13) நடைபெற்ற கூட்டங்களில் அவர் பேசியதாவது:புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 42 வீரர்களுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அர்ப்பணிக்க வேண்டும் என மோடி கூறுகிறார். அந்த வீரர்களின் குடும்பத்தினர் யாராவது இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்களா? இல்லையே. ராணுவ வீரர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை பாஜக வெட்கமில்லாமல் தேர்தலுக்குப் பயன்படுத்துகிறது. அந்த வீரர்களின் தியாகத்தை பாஜக கொச்சைப்படுத்துகிறது என்றார். பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தேசபக்தி கிடையாது. சுதந்திரப் போராட்டத்தில் யாராவது ஒருவராவது உயிர்த்தியாகம் செய்ததாக அவர்களால் கூறமுடியுமா? ஆனால் வீரசவார்கர் பிரிட்டீஷ் மகாராணியிடம் பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர். எங்களின் முன்னோடியான பகத்சிங் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க மறுத்தார். நான் இந்த நாட்டிற்காக ,விடுதலைக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்றார்.
அப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். தேச பக்தி குறித்துப் பேசுவதற்கு பாஜகவிற்கு தகுதியே கிடையாது.மோடியின் சேனை ராணுவம் என யோகி ஆதித்யநாத் கூறுகிறார். மோடி எப்போது ராணுவ தளபதியாக பதவியேற்றார் என்று தெரியவில்லை. பாஜக தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பணம் பெற்றன என்பது வெளிப்படையாகத் தெரிய வரும். இப்போது அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் அதை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என பாஜக கூறிவிட்டது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பணம் பெற்றதில் முதலிடத்தில் பாஜக உள்ளது. தமிழகத்தில் எப்படியாவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிபிஐ, வருமான வரித்துறையை தவறாகப் பயன்படுத்தி அதன்மூலம் அதிமுகவினரை மிரட்டி பாஜக கூட்டணி அமைத்துள்ளது என்றார்.
மாநில உரிமைகளை மதிக்காத பாஜகவையும், ஊழல் சாம்ராஜ்யத்தில் மிதக்கும் அதிமுகவையும், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, பாமகவை தோற்கடிக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.வில்லிவாக்கம் கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் எம்.ஆர்.மதியழகன் தலைமை தாங்கினார். தொகுதிக் குழு உறுப்பினர் ஜி.அன்பழகன் வரவேற்றார்.திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விஜயா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஜானகி ராமன், ஜெ.ஏழுமலை, மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், சு.நவநீத கிருஷ்ணன், விசிக மாவட்டப் பொருளாளர் செ.பொன்னிவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.அப்துல்ஷபிக், மனித நேய மக்கள் கட்சி தொகுதி செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிடோர் பேசினர்.பெரம்பூர் கூட்டத்திற்கு சிபிஎம் திருவிக நகர் தொகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் தலைமை தாங்கினார். திமுக மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி எம்எல்ஏ, காங்கிரஸ் நிர்வாகிகள் பாலு, எஸ்.நிலவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், டி.கே.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.