tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : எழுத்தாளர் வ.ரா. நினைவு நாள்....

தமிழறிஞரும் எழுத்தாளருமான வ.ராமசாமி 1889 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார்.

தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களில் எழுதியவர் வ.ரா. 1914 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைப் பணியில் ஈடுபட்டார். தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார். பிறகு வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றினார். இவர் ஆசிரியராக இருந்த மணிக்கொடி தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய இதழாக விளங்கியது. வ.ரா.வின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் சேர்ந்து, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அந்த வகையில் கல்கி, புதுமைப்பித்தன் போன்றவர்களைக் கூறலாம். கல்கியின் முதல் புதினமான விமலாவை, சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டார்.

காத்தரின் மேயோ என்ற அயல்நாட்டுப் பெண் எழுதிய இந்திய மாதர் என்ற நூலில் இந்தியர்களைமிகவும் இழிவாகச் சித்தரித்திருந்தார். இதனை மறுக்கும் விதத்தில் வ.ரா. எழுதிய “மாயா மேயோ அல்லது மாயோவுக்கு சவுக்கடி” என்ற நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆங்கிலேயர்களின் கண்டனத்துக்கும் உள்ளானது. சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத்தீவு போன்ற புதினங்களை எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகளில் சமூகத்துக்குச் சாட்டையடி கொடுத்துப் போராடும் தன்மை இருந்தது.  1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்ற வ.ரா. அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் ‘‘ஜெயில் டயரி’’ என்ற பெயரில் நூலாக வெளி வந்தது. சிறையில் இருந்த காலத்தில் இவருக்கு இருந்த ஆசுத்துமா நோய் மிகவும் அதிகமானது. உடல் நலிந்த நிலையில் சிறையிலிருந்து வெளிவந்தார். மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராகவும், பாண்டிச்சேரியில் தீவிரவாத இயக்கங்களில் ஈடுபட்டிருந்த வ.வே.சு.ஐயர், அரவிந்தர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நெருங்கிய சகாவாகவும் வ.ரா. திகழ்ந்தார்.

இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும்.வ.ரா. 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்