tamilnadu

img

பிரபல எழுத்தாளர் ராஜ் கவுதமன் காலமானார்!

பிரபல எழுத்தாளரும், தமிழ் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் ராஜ் கவுதமன் (வயது 74) இன்று அதிகாலை காலமானார்.
பேராசிரியர் ராஜ் கவுதமன், புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றவர். இவர் தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்சிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகராக இருத்தவர். தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். 
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜ் கவுதமன், இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
"அறம், அதிகாரம் என்ற இரண்டுசொல் கொண்டு பழந்தமிழ் இலக்கியம் முழுமையும் ஆய்ந்தறிந்து ராஜ் கவுதமன் வரைந்து காட்டிய சித்திரம் தமிழ் சிந்தனை உலகிற்கு புத்தொளியூட்டியது.
தமிழ் சமூகத்தின் அறிவியக்கத்திற்கு செழுமையூட்ட வாழ்வு முழுவதும் உழைத்திட்ட அறிவாளுமை தோழர் ராஜ் கவுதமனுக்கு ஆழ்ந்த இரங்கல்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.