tamilnadu

img

6300 மையங்களில் தொழிலாளர்கள் ஆவேச போராட்டம்

சென்னை:
மத்திய பாஜக மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை மற்றும் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையைக் கண்டித்து ஜூலை 3 அன்று அனைத்துத்துறை தொழிலாளர்களும் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் ஜூலை 3 அன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் பொதுத்துறைகளை தாரை வார்க்கக் கூடாது. நிலக்கரி சுரங்கங்கள், மத்திய பாதுகாப்புத்துறையை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளை, சட்டங்களை திருத்துவதைக் கண்டித்தும் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்தும் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐடியுடிசி மற்றும் இதர துறைவாரி சங்கங்கள் மற்றும் வங்கி, காப்பீடு, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் தந்தி, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கங்கள்  இந்த தேசம் காக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஏறத்தாழ 6300 மையங்களில் சுமார் 62 ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் உருக்காலை, பிஎச்இஎல், தூத்துக்குடி, சென்னை துறைமுகம் என மத்திய பொதுத்துறை தொழிற்சாலைகள் முன்பாக ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து டிப்போக்கள் , மின்சார அலுவலகங்கள், குடிநீர், சிவில் சப்ளைஸ் அலுவலகங்கள் முன்பாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கூட்டுறவு ஊழியர்கள், ஆட்டோ , சாலைப் போக்குவரத்து, தோட்ட தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ,ஆஷா ஊழியர்கள் ,மீன்பிடி தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், உள்ளாட்சி தொழிலாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் என்று தமிழகம் முழுவதும் அனைத்துத்துறை தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர் .கருமலையான் திருநெல்வேலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநில துணைத் தலைவர்கள் கே. விஜயன், கருப்பையன், டி உதயகுமார் ,ஆர் சிங்காரவேலு, மாநில செயலாளர்கள் கே.தங்கமோகன், கிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமி  தேவா, நாகராஜ் என மாநில தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.