சென்னை, செப். 4 - சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் உள்ள 258 தினகூலி தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அதன் பொது மேலாளர் ஆர்.கோவிந்த ராஜூலு தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிஐடியு நடத்திவந்த தொடர் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோடு உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு எல்லை விரிவாக்கம் செய்யப்ப ட்டது. அச்சமயம் உள்ளாட்சிகளில் இருந்த 274 தொழிலாளர்கள் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் இணைக்கப்பட்டனர். இவர்களில் 258 பேர் தற்போது தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். இந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 10 ஆண்டு பணி நிறைவு செய்தவர்க ளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்தபடி குறைந்தபட்ச கூலியாக 346 ரூபாயை வங்கி மூலம் வழங்க வேண்டும், ஜெட்ராடு, சில்ட் ஆட்டோ ஓட்டுநர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) ஒருங்கிணைத்தது. இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் சங்கத்தின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. ஆனால், அதனை அமல்படுத்தாமல் காலம் கடத்தியது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிறகு, தொழிலாளர் நலத்துறை ஆணையர், துறை செயலாளர், நிர்வாக இயக்குநர், பொது மேலாளர் என செப்.3 வரை பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடை பெற்றன. இதில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் புதனன்று (செப்.4) சிந்தாதரிப்பேட்டையில் உள்ள வாரிய தலைமையகம் முன்பு சங்கத் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், சங்கப் பொதுச் செயலாளர் எம். பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வாரிய பொது மேலாளர் சங்கத் தலைவர்களை அழைத்து பேசினார். அதன் பின்னர் போராட்டக் களத்திற்கு வந்து பேசிய பொது மேலாளர் கோவிந்தராஜூலு “258 தினக் கூலி தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் அமைச்சர் வழங்குவார்” என்றார். இதன் மூலம் கடந்த 8 வருட மாக சிஐடியு நடத்தி போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.