சென்னை:
பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியஜனநாயக வாலிபர் சங்கநிர்வாகிகள் மீதான பொய்வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று சங்கத்தின்மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த வழக்கில் சிபிஐ மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளது. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள்ஏற்கனவே தமிழக காவல்துறையால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.தற்போது, சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைகள் இன்னும் வேகப்படுத்தப்பட வேண்டும். பாலியல் வன்முறை வழக்கை விசாரிப்பதற்கான நெறிமுறைகளை மீறிய தமிழக காவல்துறையினர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுக் கொள்கிறது . மேலும் கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் குறித்து தனியாகவிசாரணை நடத்த வேண்டும்.பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து போராடிய வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ் பாலா, மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசந்திர போஸ், கோவை மாவட்டசெயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது கோவை மாநகர காவல்துறைபொய்வழக்குப் புனைந்து, வழக்கு நடத்தி வருகிறது. ஒருபுறம் உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பது, மறுபுறம் குற்றச் செயல்களுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வன்மத்துடன் வழக்குப்பதிவு செய்வதுஎன்ற தமிழக காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக் கோரி போராடியவர்கள் மீதுபோடப்பட்ட பொய் வழக்கைதமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.