சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில்டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பிப்ரவரி 2 செவ்வாயன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு டாஸ்மாக் தொமுச மாநிலத்தலைவர் ஆ.இராசவேல் தலைமை வகித்தார்.இப்போராட்டத்தில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், மதுவை விற்று லாபம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடுஇருக்கிறது. ஏனெனில் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு மது விற்பனையில் தமிழ்நாட்டின் வருமானம் செல்கிறது என அரசு கூறுகிறது.
டாஸ்மாக் கடைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தநிலையில் வேறு வேலை மற்றும் இறப்பு போன்றவைகளால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து, தற்போது 26 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம், பணி வரன் முறைப்படுத்தப்படவில்லை,
சம வேலைக்கு சமஊதியம் என்னாச்சு
தமிழ்நாடு அரசு தன்னுடைய வருவாய்த்தேவைக்காக மதுவிற்பனை யை செய்து வருகிறது. மற்ற தொழில்களெல்லாம் வேலைவாய்ப்புக்காக துவங்கப்படுகிறது என்றால் டாஸ்மாக்மட்டுமே வருவாய்க்காக துவக்கப் பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவில் நாம் தலையிடவில்லை. ஆனால் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படவேண்டும். ஆவின் மற்றும் பொதுவிநியோக ஊழியர்களை போல் சுயமரியாதையோடு டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தப்படவேண்டும். சமவேலைக்கு சமஊதியம்வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடிவருகின்றன. ஒரே மாதிரியான உழைப்பு செய்யப்பட்டாலும் மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுவது நியாயமன்று. நிரந்தரத்தன்மையுள்ள வேலை என்பதே நமது போராட்டத்தின் நோக்கமாகும். டாஸ்மாக் தொழிலாளர்களின் ஒற்றுமையான போராட்டமே கோரிக்கைகளை வெல்லச்செய்யும். நமது வலிமை என்பது இணை வதில் தான் இருக்கிறது.
பலம் அதிகரிக்க வேண்டும்
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற வேண்டிய போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? நமது எண்ணிக்கையின் பலம்இன்னும் அதிகரிக்க வேண்டும். தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் இடத்தை அங்கு காவல்துறையால் தீர்மானிக்கப்பட முடியவில்லை. ஏனெனில் விவசாயிகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் அணி திரட்டப்பட்டனர். போராட்டத்தை அவர்கள் தீர்மானித்தது போல் நமது போராட்டத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்.
நீதிமன்றம் என்ன செய்கிறது
வேலை நிறுத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் மூலம் தடையாணை பெறும்அவலநிலை இங்குள்ளது. போராட்டத்திற்கு தடைவிதித்து அலைக்கழிக்கும் உச்சநீதிமன்றம், டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து ஏன் ஆய்வு செய்யவில்லை. டாஸ்மாக் ஊழியர்களை ஏன் நிரந்தரப்படுத்தவில்லை, பண்டிகை விடுப்பு ஏன்தரவில்லை, சட்டசலுகைகள் ஏன் மறுக்கிறீர்கள், உலகம் முழுவதும் உள்ள 8 மணி நேரம் வேலை இவர்களுக்குமட்டும் இல்லையே என கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு ஏன் மனம் வரவில்லை. ஆகவே தொழிலாளர்களே உங்கள் பலத்தை அதிகப்படுத்துங்கள், உங்கள் ஒற்றுமை மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுக்க உதவும் என்றார். தொமுச பேரவை பொருளாளர் நடராஜன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.திருச்செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.