tamilnadu

img

வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு... குறைகளை சரிசெய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்...

சென்னை:
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வேளாண்மைக்கென்று தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை தில்லியில் போராடிக்கொண்டிருக்கும் உழவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என்று வேளாண்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதற்கு பாராட்டுக்கள். விவசாயத்துக்கும் உழவர் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது என்ற முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்குப் பார்வை, ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி, வேளாண்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல், வேளாண் பரப்பளவை அதிகரித்தல், உற்பத்தியை பெருக்குதல், சிறுதானிய உற்பத்திக்கு கூடுதல் அழுத்தம் என வரவேற்கத்தக்க பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறது.வேளாண் சார்ந்த பல்வேறு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து மாதந்தோறும் கூடி பேசி திட்டமிடுவது என்பது நிர்வாகத்தில் செயல்பட்டுள்ள முக்கிய சீர்திருத்தம் ஆகும்.

பனைமர வளர்ப்பை அதிகப்படுத்துதல், பனைவெல்லம் ரேசன் கடைகளில் விற்கப்படும், முருங்கைக்கான ஏற்றுமதி மையம்,வேளாண் ஆராய்ச்சிக்கு கூடுதல் முக்கியத் துவம், வேளாண் பட்டதாரிகளையும், இளைஞர்களையும் வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவது, வேளாண் விளை பொருள் விற்பனைக்கான சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல், விதை உற்பத்தியில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் தொலைநோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களாகும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
அழுகும் வேளாண் பொருட்களை அழிவிலிருந்து பாதுகாக்க கூடுதல் குளிர்பதன கிடங்குகள் அறிவிக்கப்படாதது, நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்காதது, பெண் விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் வகையில் எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படாதது  போன்ற குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.திமுக தேர்தல் வாக்குறுதியாக நெல்லுக்குகுவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது. உற்பத்திச் செலவு அதிகரித்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிக்கொண்டுள்ள நிலையில் அதை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் நெல்லுக்கு சன்னரகத்திற்கு ரூ.100, சாதாரண ரகத்திற்கு ரூ.75ம், கரும்புக்கு ரூ.150 மட்டும் உயர்த்தியிருப்பது போதுமானது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். வரும் ஆண்டில் விலையை உயர்த்தி அறிவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.வேளாண்மையில் இயந்திரப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தனியார் இயந்திரங்களை பயன்படுத்துவதால் உற்பத்தி செலவு கடுமையாக அதிகரிக்கிறது. இந்த நிலையில் கூடுதல் இயந்திரங்களை அரசே வாங்கி குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும். விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உற்பத்திச் செலவை குறைப்பது மிக முக்கிய நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க தார்ப்பாலின் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைத்து நாசமானது முக்கிய பிரச்சனையாக இருந்ததை அறிவோம். எனவே, நெல் கொள்முதல் செய்வதுடன் அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை அமைப்பது மிகவும் முக்கியம். இதற்குரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.மொத்தத்தில் வேளாண் நிதி நிலை அறிக்கை வரவேற்கத் தக்க வகையில் இருந்தாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் சரிசெய்யப்பட தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.