சென்னை:
விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தமிழக அரசின் அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.கடந்த ஆண்டு உரிய காலத்தில் மேட்டூர்அணை திறக்கப்பட்டது. பருவ மழையும் சீராக இருந்தது. விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் மிகுந்தநம்பிக்கையோடு இருந்த நிலையில் நவம்பர் மாதம் வீசிய நிவர், புரவி புயல்தாக்குதல் மற்றும் ஜனவரி மாதம் பெய்தஎதிர்பாராத கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பல லட்சக்கணக்கான ஏக்கரில் அழிந்து போய் விவசாயிகள் பெருந்துயரத்துக்கு ஆளாயினர். கை முதலை இழந்து மீளவே முடியாதுஎன்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 5 அன்று சட்டமன்றத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்க தக்கது. அதேநேரத்தில் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களையும் குறைந்தபட்சம் சிறு-குறு விவசாயிகளுக்காகவது தள்ளுபடி செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.