tamilnadu

img

ரூ.33 ஆயிரம் கோடி நட்டத்தை சீரமைப்போம்...  போக்குவரத்து அமைச்சர் தகவல்....

சென்னை:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், இயக்கப்படுகின்ற ஏறத்தாழ 19,700 பேருந்துகளில், 14,215 பேருந்துகள் தற்போது இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களுக்கு இயக் கப்படுகின்ற 2,100 பேருந்துகள் தற்போது இயக்கப்படவில்லை.6 ஆம் தேதி முதல் இந்த 2,100 பேருந்துகளை தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளும் அதாவது 17,600 பேருந்துகள் 50 சதவிகித இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படும். பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான, கட்டாய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்கள் ஏறத்தாழ, ரூ.33 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்கி வருகிறது. டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள இந்த சூழ்நிலையிலும், பொது மக்களை எந்தவிதத்திலும், பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.பணிக்கு செல்லும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உதவியாளர், திருநங்கையர்கள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக 7,291 சாதாரண, கட்டணப் பேருந்துகள் தற்போது இயக் கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,550 பேருந்துகளும், விழுப்புரம் கழகத்தில் 1,054, சேலத்தில் 813, கோவையில் 1,140,  கும்பகோணத்தில் 1,257, மதுரையில் 890, திருநெல்வேலி கழகத்தில் 587 பேருந்துகள் என மொத்தம் 7,291 சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டணமின்றி பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள ஏதுவாக, 12.7.2021 முதல் தனித்தனி வண்ணங்களுடன் பயண அனுமதி சீட்டு வழங்கப்படும்.ஓட்டுநர் உரிமம் பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் சில விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர் பாக அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து, பின்னர் முதலமைச்சரின் கவனத் திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

டீசல் விலை அதிகரித்து வருவதால் மின்சாரப் பேருந்துகள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இயக்குவதற்கான உள் கட்டமைப்புகள் 6 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட்டு, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.டீசல் பேருந்துகளை விட மின்சாரப் பேருந்துகள் 5 மடங்கு விலை கூடுதலாக உள்ளது. டீசல் பேருந்தையும், மின்சாரப் பேருந்தையும் ஒப்பிட்டு கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும். பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் பேருந்துகளை இயக்கவும், நட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.