சென்னை:
உடல் நலக்குறைவால் மரணமடைந்த மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.எல்.பிரசாத்துக்கு நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங் கள் இரங்கல் தெரிவித்துள்ளது.மக்கள் குரல், ஈநாடு தெலுங்கு பத்திரிகைகளில் பணியாற்றி, தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் மூத்த நிருபராக பணியாற்றி வந்த பி.எஸ்.எல்.பிரசாத் உடல் நலக் குறைவால் புதனன்று ( ஆக.6) இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 65.1970-களில் வெளியான அண்ணா பத்திரிகையில் வடசென்னை பகுதி நிருபராக தன் பணியை தொடங்கி, சென்னை காவல் ஆணையர் அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் செய்தி சேகரிக்கும் நிருபராக, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தவர். இதில் சென்னை உயர் நீதி மன்றத்தில் 23 ஆண்டுகள் மூத்த நிருபராக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை மேற்கொண்டி ருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை பிராட்வே, வரதா முத்தியப்பன் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மயானத்தில் நடைபெற்றது. பிரசாத் மறைவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இணைச் செயலாளர் பாரதி தமிழன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் டியுஜெ மாநிலத் தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.