வெள்ளத்தடுப்புத் திட்டங்களால் வரதராஜபுரம் இந்தாண்டு தப்பியது: பொதுமக்கள் நிம்மதி!\
காஞ்சிபுரம், டிச.11- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் குடியிருப்புப் பகுதி, 2015 வெள்ளத்தின்போது அதிகம் பாதிக்கப்பட்ட தால், அப்போதைய மத்தியக் குழுவினர் இப்பகுதிக்கு வந்து சேதங்களை மதிப்பிட்டனர். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பருவமழையின் சவால்களைச் சமாளித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். மாநில அரசு செயல்படுத்திய 'வெட்டி மூடி கால்வாய் ' திட்டங்கள் மூலம் வெள்ள நீர் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பிடிப்புப் பகுதி களுக்கு வெற்றிகரமாகத் திருப்பி விடப்பட்ட தால், வரதராஜபுரம் இந்த முறை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப் பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தைத் தணிக்கும் வகையில் அதிக திட்டங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. 1970களில் வளர்ச்சியடைந்த இந்தப் பஞ்சாயத்தில், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்களால் 1972-ல் உரு வாக்கப்பட்ட இராயப்பா நகர் உட்பட 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வெள்ள அபாயத்தால் பல மனைகளில் வீடுகள் கட்டப்படாமல் காலியாக உள்ளன. வெள்ள அபாயம் குறையும்போது, இந்தப் பகுதியில் பெருமளவில் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கைகள் வரதராஜபுரம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் வி. இராஜசேகரன் கூறுகையில், வெளிவட்டச் சாலையால் போக்குவரத்து மேம்பட்ட பிறகுதான் வரதராஜபுரம் வளர்ச்சி அடையத் தொடங்கியது என்றார். வெள்ளத்தைத் தடுக்க அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள வெளிவட்டச் சாலைப் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஆற்றின் கரையோரப் பகுதிகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வரதராஜபுரம் பஞ்சாயத்துத் தலை வர் எம். செல்வமணி கூறுகையில், அடை யாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாகும். மேலும், பருவமழையின்போது அடையாற்றில் நீர்மட்டம் உயரும்போது வெள்ளத்தைத் தடுக்க ஷட்டர்கள் அமைக்கவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இராயப்பா நகர் குடியிருப்புப் பகுதியில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்றும், பஞ்சாயத்துக்காக ஒரு சமுதாயக் கூடம் கட்டப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இங்கிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கட்டப்பட்டதால் பேருந்து போக்குவரத்து மேம்பட்டாலும், வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை வெளிவட்டச் சாலையை ஒட்டிச் செல்லும் 50 மீட்டர் பாதையை ரயில் பாதை அமைப்பதற்குப் பயன்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவித்தனர். ரயில் பாதைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் சில பகுதிகள் மற்ற உள்கட்ட மைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சில ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
