tamilnadu

img

தடுப்பூசி ஒத்திகை வெற்றி: அதிகாரிகள் மகிழ்ச்சி

சென்னை:
சென்னை உள்பட 17 இடங்களிலும் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி அடைந்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் சனிக்கிழமையன்று(ஜன.2)  நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை  நடந்தது.சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், கோவை மாவட்டத் தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூவலுப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களிலும் ஒத்திகை நடந்தது.திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சமாதானபுரம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பெட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது.

சென்னையில் காலை 9 மணிக்கு கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகையை சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். திருவள்ளூரை அடுத்த நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 17 இடங்களில் நடந்த இந்த ஒத்திகை வெற்றி அடைந்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனாவுக்கு எதிரான போரில் நடைபெற்ற இந்த தடுப்பூசி ஒத்திகை அனைத்து மையங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.