வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து கண்டனம் முழங்கிட கட்சி அணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்திருக்கிற தாக்குதல் ஒரு சட்ட விரோத, அடாவடி தாக்குதல் மட்டுமல்ல, அந்த நாட்டின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை ஆகும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது இணையர் சீலியா ஃப்ளோரஸ் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.
சுதந்திரமான ஒவ்வொரு நாட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏகாதிபத்தியம் சொல்லும் பொய்களைப் போலவே, வெனிசுவேலா போதைப் பொருள் மையம் என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெனிசுலா உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் வளம் கொண்ட நாடு என்ற பின்னணியில் இந்த ஆக்கிரமிப்பு, அமெரிக்காவின் கார்ப்பரேட் எண்ணெய் கம்பெனிகளின் கொள்ளையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகிற அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும். வெனிசுலா சோசலிச கியூபாவின் வலுவான ஆதரவு நாடு என்பதும் தாக்குதலுக்கான காரணத்தில் அடங்கும்.
இது லத்தீன் அமெரிக்க நாடுகளை மிரட்டி தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘மன்றோ தத்துவத்தின்’ கீழ் தொடரப்படும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கையாகும்.
அமெரிக்கா உடனடியாக போரை நிறுத்தி மீண்டும் வெனிசுலா இறையாண்மையுடன் செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும், மதுரோவையும், அவரது இணையரையும் விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலுவான கருத்தைத் தெரிவிக்கிறது. வெனிசுலாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோ, கொலம்பியா ஜாக்கிரதை என டிரம்ப் அறிவித்திருப்பது, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்பதற்கான எச்சரிக்கையாகவே உள்ளது. இது லத்தீன் அமெரிக்க பிரதேசம் முழுமையிலும் பதட்டத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலை கண்டித்து சில நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும், உலக அமைதியையும் பாதுகாப்பதற்கு உலக நாடுகள் உரத்து குரல் எழுப்ப வேண்டும். மோடி அரசு வெனிசுவேலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்டக்குழுக்கள் உடனடியாக, சாத்தியமான மையங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் / டிரம்ப் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும். அமெரிக்க அரசைக் கண்டித்து, வெனிசுலாவுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்து நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
