தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 09) திங்கட்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று (டிசம்பர் 10) கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் அதிமுக கே.பி. முனுசாமி, “உ.வே.சாமிநாதர் அவர்களின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது,
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் குறித்து சட்டப்பேரவை உறுப்பினரின் முழு கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆண்டுந்தோறும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கடைபிடித்து வருகிறோம். அவரின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உத்தமதானபுரத்தில் உள்ள அவரது இல்லம் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் காலங்களில் இது குறித்தும் அரசு பரிசீலிக்கும் என பதில் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து, இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில், உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்” என உறுதியளித்தார். இதனையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்