tamilnadu

மதுரவாயல் அருகே விபத்தில் 2 பேர் பலி

பூந்தமல்லி, மே 4-சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் நாகார்ஜூனா (24). இவரது நண்பர் ரமேஷ் (29). இருவரும் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் தங்கி நொளம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அக்கவுண்டன்ட் ஆக வேலை செய்து வந்தனர்.இந்த நிலையில் வெள்ளியன்று (மே 3)வேலை முடிந்து நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் தங்கியுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். தாம்பரம் மதுரவாயல் செல்லும் பைபாஸ் சர்வீஸ் சாலையில், அடையாளம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தனர். அம்பத்தூரைச் சேர்ந்த திருமூர்த்தி (25),அவரது தம்பி ஹரிகிருஷ்ணன்(19), இருவரும் திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்துவந்தனர். அவர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அடையாளம் பட்டு அருகே இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நாகார்ஜூனா, ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எதிர்த்திசையில் வந்து மோதிய திருமூர்த்தி, அரிகிருஷ்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர்.இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்து போனவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.