சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜேசிபி இயந்திர வாகனத்தின் டயரில் காற்றை நிரப்பும் போது, திடீரென டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சில்தாரா தொழிற்பேட்டை பகுதியில் வாகன வொர்க்ஷாப் ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று இரு பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் டயருக்கு காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர். ஒருவர் காற்று நிரப்பப்படும் டயரின் மீது ஏறி குதித்து காற்று போதுமான அளவு நிரம்பி இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
டயர் வெடித்து சிதறியதை அடுத்து அங்கு இருந்த 2 பணியாளர்கள் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டன. பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த இருவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் ரெவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.