tamilnadu

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு பேரவைத்தலைவர் நோட்டீஸ்?

சென்னை: அதிமுகவில் டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேருக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில்  மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு பேரவைத்தலைவரையும் சேர்த்து 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டி.டி.வி.தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக் குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கடந்த ஒரு ஆண்டாக டி.டி.வி. தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர்.நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக இவர்கள் 3 பேரும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பேரவைத்தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை சந்தித்து முறையிட்டார். அதில் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு ஆதாரமாக 3 பேரும் தேர்தலின்போது தினகரன் கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். சட்ட விதிகளை ஆராய்ந்த அவர் 3 எம்.எல்.ஏ.க்களும் என்னென்ன விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்தார்.இதைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் தயாரிக்கப்பட்டது. அதில், “அ.தி.மு.க. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொறடா சமர்பித்துள்ளார். இதுகுறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இக்கடிதம் கண்ட ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும். இல்லை என்றால் கட்சி தாவல் விதிப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறப்பட்டுள்ளது.3 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த கடிதத்தை பதிவுத் தபாலில் அனுப்ப பேரவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.இதற்கு 3 எம்.எல்.ஏ.க்களும் என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும்.