சென்னை:
உயர்நீதிமன்ற கிளைகளில் வருகிற 31ஆம் தேதி வரை காணொலி காட்சி மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும், தற்போது நீதிமன்றங்களை திறக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது.எனவே சென்னை உயர்நீதி மன்றம், மதுரை கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில், சென்னை நிர்வாக கமிட்டி கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதிகள் தற் போதுள்ள சூழ்நிலையை ஆராய்ந்தனர்.இதையடுத்து உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசும், தமிழக அரசும் ஊரடங்கை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தினமும் அரசு வெளியிடும் செய்திக் குறிப்புகளையும் நிர்வாக கமிட்டி நீதிபதிகள் ஆராய்ந்தனர். வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை இன்னும் தொடர்ந்து வருவதால், நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடுகளில் எந்த தளர்வையும் செய்ய முடியாது என்று முடிவு செய்துள்ளனர்.எனவே, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்கள் தற்போது எந்த முறையில் (காணொலி காட்சி) வழக்குகளை விசாரித்து வருகிறதோ, அதேமுறை வருகிற 3 ஆம் தேதி வரை தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.