போக்குவரத்து ஊழியர்களின் 14 வது ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான 7வது சுற்று பேச்சுவார்த்தை ஆக.23 அன்று குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் தொடங்கியது.
இந்தக்கூட்டத்தில் ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வூதியர்களுக்கு 81 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தின. இவை குறித்தெல்லாம் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறி, பேச்சுவார்த்தையை அமைச்சர் ஒத்தி வைத்தார்.
ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சங்கத்தினர் தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில் 7வது கட்ட பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று புதனன்றும் (ஆக.24) தொடர்ந்தது. துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மு.சண்முகம் எம்.பி., கி.நடராசன் (தொமுச), அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார் (சிஐடியு) உள்ளிட்டு 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் முனைவர் கே.கோபால், நிதித்துறை இணைச்செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகள் உயர்த்தினால், ஓய்வூதியர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் என பிரதான சங்கங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது