சென்னை, மே 15- தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்து வருகின்றனர். பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்ட சிங்கப்பூர், தென்னிந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. 3 மணி நேரத்துக்கு குறைவான பயண நேரம், சிறந்த மற்றும் அடுத்தடுத்து கிடைக்கும் விமான சேவைகள் ஆகியவை தென்னிந்தியாவில் இருந்து அதிக அளவில் சிங்கப்பூருக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.சுற்றுலாப் பயணிகளின் விருப்பங்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப பல்வேறு விஷயங்களை சிங்கப்பூர் வழங்குகிறது. சிறந்த வாழ்க்கைத்தரம், பொழுதுபோக்குக்கான வாய்ப்புகள் என குழந்தைகள் முதல், இளம் தலைமுறையினர் மற்றும் குடும்பங்கள் வரை அனைவரும் விரும்பும் பல்வேறு விஷயங்கள் உள்ளதால் மக்கள் மத்தியில் சிங்கப்பூர் புகழ்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் படம்பிடிக்கப்பட்ட ‘ராஜா ராணி’ தொடரின் அத்தியாயத்தால் ஈர்க்கப்பட்டு விடுமுறைக்கு இங்கு வர விரும்புபவர்களை வரவேற்பதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் தெற்காசியாவுக்கான மண்டல இயக்குநர் சிறீதர் கூறினார். கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஒருகோடியே 44லட்சம் பயணிகள் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.