சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில், அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில், நாளை முதல் நான்கு நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னெச்சரிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.