tamilnadu

img

ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு  வாலிபர் சங்கம் வரவேற்பு 

சென்னை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்.  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும்  ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது. 

ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பங்கேற்று ஆதரவு தெரிவித்தது. மேலும் வாலிபர் சங்கம் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதுடன் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. சேலம் மற்றும் சென்னையில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத் தலைவர்களை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது.காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திடவும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக  திரும்பப்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.