அம்பத்தூர்:
அத்தியாவசிய பாதுகாப்பு பணிசேவை அவசரச் சட்டம் - 2021ஐ திரும்பப் பெறக் கோரியும், ஒன்றியஅரசின் தன்னிச்சையான கார்ப்பரேஷன் முடிவை திரும்பப் பெறக் கோரியும் பாதுகாப்புத் துறை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு சார்பில் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 2 முதல் 14ஆம் தேதி வரை 4 லட்சம் பாதுகாப்புத்துறை சிவிலியன் ஊழியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது:
ஒன்றிய அரசின் எதேச்சதிகார போக்கிற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து மத்திய தொழிற் சங்கத் தலைவர்களும் திரண்டு வந்துநமக்கு ஆதரவாக குரல் எழுப்பி நமதுபோராட்டம் வெற்றி பெறும் வரைநமக்கு தோளோடு தோள் நின்றுபோராட்டக்களத்தில் உறுதியோடுநிற்போம் என்ற வாக்குறுதியையும் அளித்துள்ள அனைவருக்கும் நமதுபோராட்டக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நமது போராட்டங்களையும், கோரிக்கைகளையும் ஆதரித்து தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கடிதங்களை எழுதுவது மட்டுமல்லாமல் மக்களவைக்குள்ளும் பிரச்சனையை எழுப்பி வருகிறார்கள்.
7 கார்ப்பரேசன்களும் 100 சதவீதம்அரசின் பங்கோடு செயல்படும் என்ற போலியான வாக்குறுதியை ஒன்றிய அரசு அளித்து வருகிறது. ஆனால் பாதுகாப்புத்துறை கொள்முதல் மற்றும் ஏற்றுமதி கொள்கை 2020இல்பாதுகாப்புத்துறையின் அனைத்து பொதுத்துறை நிறுவனப் பங்குகளும் விற்கப்படும் என்று கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு துறையில் - பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். ஏற்கனவே பாதுகாப்புத் துறையில் 8 பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய 7 கார்ப்பரேஷனும் அவற்றோடு இணையும் போது 15 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக மாறும், எந்த 4 பொதுத்துறை அரசின் கட்டுப்பாட்டில்இருக்கும் என்பது அரசுக்கு மட்டுமே தெரியும்.அரசின் 100 சதவீத பங்கோடு செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டஊழியர்கள் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் (விஆர்எஸ்) மூலம் வெளியேற்றப்பட்டு இன்றைய தினம் வரைஅவர்களுக்கு ஓய்வுகால சலுகைகள்வழங்கப்படவில்லை. எனவே 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை என்பது ஏமாற்று வேலை.
ஊழியர்களின் சர்வீஸ் பாதுகாக்கப்படும் என்று கூறுகின்ற அரசு, ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அரசு ஊழியர்களாக இருப்பார்கள், அதன் பிறகு அவர்கள் கார்ப்பரேஷன்ஊழியர்களாக மாற வேண்டும். அப்படி தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தில் வெளியேற வேண்டும்அல்லது பதவி இறக்கம் செய்யப்பட்டு மாற்றுப் பணிகளில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதுதான் இப்போதுள்ள சட்டங்கள், பணி பாதுகாப்பு என்று திரும்பத் திரும்ப கூறுகின்ற அரசு எந்தவிதமான பாதுகாப்பு என்பது குறித்தோ, என்.பி.எஸ்(தேசிய பென்ஷன் சிஸ்டம்) ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பென்சன் பாதுகாப்பைப் பற்றி வாய்த் திறக்க மறுக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் அரசின் சதிவலையில் சிக்காமல் தொடர்ந்து நியாயமான உரிமைகளுக்காக போராடுவது என்று சம்மேளனங்கள் முடிவெடுத்துள்ளது. அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரான அத்தியாவசிய பாதுகாப்பு பணி சேவை அவசரச் சட்டம் - 2021ஐ திரும்பப் பெற வேண்டும், நாட்டின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் 7 கார்ப்பரேஷன் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் அதற்காக மக்களவையின் மனுக்களின் குழு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமெனவலியுறுத்தி 4 லட்சம் பாதுகாப்புத் துறை தொழிலாளர்களும் கையெழுத்திட்டு மனுவை அனுப்புவது எனமுடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும் 2ஆம் தேதி முதல்14ஆம் தேதி வரை இரண்டு வாரம் கையெழுத்து இயக்கம் நடத்திட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.