tamilnadu

img

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நிறைவு:அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘போதையற்ற தமிழ்நாடு ஒரு கோடி கையெழுத்து இயக்க நிறைவு விழா மாநாடு ஞாயிறன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

ஒன்றிய பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நாடு முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் அதிகரித்து வருகிறது. மக்களை திசைதிருப்ப திட்டமிட்டு போதைபொருட்களை புழக்கத்தில் விடுகின்றனர். குறிப்பாக, இளைஞர்களை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த வியாபாரம் நடைபெறுகிறது. 3 லட்சம் கோடி ரூபாய் போதைப் பொருட்கள் புழங்கும் களமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்காண்டு சராசரியாக 10 விழுக்காடு என்ற அளவில் மது விற்பனை உயர்ந்து வருகிறது. இதிலிருந்து மக்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

இதனை மையப்படுத்தி ‘போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு இந்திய ஜனாநயக வாலிபர் சங்கம் ஒருகோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியது. இந்த இயக்கத்தை பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். 153 நாட்கள் நடைபெற்ற கையெழுத்து இயக்க பிரச்சாரத்தில் திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பத்திரியையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், சமய தலைவர்கள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

மேலும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் தாமாக முன்வந்து இந்த இயக்கத்தில் பங்கேற்றன. வாலிபர் சங்க ஊழியர்கள் ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மால்கள், மார்க்கெட்டுகளில் பிரச்சாரம் செய்து கையெழுத்துக்களை பெற்றனர். போதைக்கெதிராக விழிப்புணர்வை உருவாக்கவும், அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த இயக்கம் நடைபெற்றது.

இந்த கையெழுத்து இயக்கத்தின் நிறைவு விழாவை வாலிபர் சங்கத்துடன் லயோலா கல்லூரியும் இணைந்து நடத்தியது. மாற்று ஊடக மையம், புத்தர் கலைக்குழு, காம்ரேட் டாக்கீஸ் உள்ளிட்ட கலைக்குழுவினரின் கலை நிகழ்வுகளோடு இந்த நிகழ்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிறைவு விழா துவக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி எம்.சி., வரவேற்றார்.

இந்நிகழ்வின் தொடக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., லயோலா கல்லூரியின் துணைத்தலைவர் ஆண்டனி ராபின்சன், செயலாளர் பி.ஜெயராஜ், முதல்வர் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ், தலைமை செயல் அதிகாரி ஏ.இருதயராஜ், காட்சி தொடர்பியல் துறை தலைவர் ஜஸ்டிஸ் பிரபு, பேரா. இரா.காளீஸ்வரன், இயக்குநர் ராஜூ முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்ரவர்த்தி, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்கரவேலன், பொருளாளர் கே.எஸ்.பாரதி உள்ளிட்டோர் புறாக்களை பறக்க விட்டு விழாவை தொடங்கினர். இந்நிகழ்வை காட்சி தொடர்பியல் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.நித்யா ஒருங்கிணைத்தார்.

‘போதையற்ற தமிழ்நாடு என்று வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், சமஸ், ஆவுடையப்பன், இயக்குநர்கள் எஸ்.ஜே.கௌதம்ராஜ், ரவிக்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹைனா உள்ளட்டோர் பேசினர். இந்நிகழ்வை லயோலா கல்லூரி உளவியல் துறை ஒருங்கிணைப்பாளர் அனிதா யாழினி, சமூகப்பணி துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.ஹன்னா எவாஞ்சலின் சங்கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.