சென்னை:
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் செய்யப்படும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பெ.சண்முகம் கூறினார்.தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிப்.6 அன்று நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிகழ்வுக்கு சென்றார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்ற அவர், அங்கிருந்த பழங்குடியின மாணவரை மரியாதை குறைவாக அழைத்து தனது செருப்பை கழற்ற வைத்தார். இது குறித்து அம்மாணவர், மசினகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கும் வகையில் அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
எனவே, இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்; எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (பிப்.10) சென்னையில் உள்ள முதலமைச்சர் வீடு முற்றுகையிடப் போவதாக மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி, பட்டினம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலிருந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, பொதுச் செயலாளர் இரா. சரவணன், துணைத் தலைவர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் முதலமைச்சர் இல்லம் நோக்கி புறப்பட்டவர்களை அங்கேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
முதல்வர் நியாயப்படுத்துவதா?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “பகிரங்கமாக நடந்த குற்றச்செயல் மீது நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்ய முயற்சிக்கின்றனர். புகார் அளித்தவர்களையும், அந்த கிராமத்தில் உள்ளவர்களையும் அழைத்து வனத்துறை அமைச்சர் முன்னிலையில் நாட்டாண்மை பஞ்சாயத்து செய்துள்ளனர். நிர்பந்தத்தின் அடிப்படையில் அந்த மாணவர் புகாரை திரும்பப் பெற்றுள்ளார். இதனை நியாயப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசுவது சரியல்ல” என்றார்.“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் 2 விழுக்காடு அளவிற்குதான் தண்டனை பெறுகிறார்கள். 98 விழுக்காடு வழக்குகள், காவல்துறையாலும், நிர்பந்தங்களாலும் நிலுவையில் போடப்படுகின்றன. எனவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்து, வழக்குப் பதிவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட மறுத்தால், தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிப்போம்” என்றும் அவர் கூறினார்.