tamilnadu

img

தேர்வுகளை திணிக்கும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வாபஸ்பெற வேண்டும்...

சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இத்தகைய முறைகேடுகள் தொடர்வது இந்த அமைப்புகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, முறைகேடுகளுக்குக் காரணமான அனைவரையும் கடுமையாகத் தண்டிப்பதில் தமிழக அரசு முழுமையான தோல்வியை தழுவியுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் ஒருசில அறிவிப்புகள் மேம்படுத்தத் தக்கதாக இருந்தாலும் பிரச்சனைகளை தீர்க்க உதவாது. மேலும், தேர்வுகளை எழுதும் இளைஞர்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இதுவரை ஒரே நிலைகொண்டதாக நடத்தப்பட்டு வந்த குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை மற்றும்முதன்மைத் தேர்வு என இரண்டு நிலை களாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. படிப்பை முடித்து வேலைதேடும் இளைஞர்கள் மீது மீண்டும் மீண்டும் தேர்வுகளை திணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற்று குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை ஒரு நிலை தேர்வாகவே நடத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புகளில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கும் நடைமுறைகளை கைவிட்டு  திறமையான, நேர்மையான நபர்களை நியமனம் செய்யவேண்டும். அரசின் அனைத்துமட்ட பணிநியமனங்களும் லஞ்சம், ஊழல் இல்லாமல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் நேர்மை ஆட்சி யாளர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நேர்மை அதிமுக ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆளும்ஆட்சியாளர்கள் தங்களை நேர்மை யானவர்களாக மாற்றிக்கொள்ளாமல் பணிநியமன முறைகேடுகளை தடுக்கஇயலாது. எனவே, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாபஸ்பெற வேண்டும். மேலும், தேர்வு முறைகேடுகளை களைவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.