tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனை - அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனம் சுமூகத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் போராடி வரும் தொழிலாளர்களையும், தொழிற்சங்க தலைவர்களையும் அச்சுறுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்.எல்)லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் இணைந்து தொழிலாளர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 
ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் திங்களன்று தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.