சென்னை:
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான பதம் சேஷத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். ஆசிரியர் ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி ஆர்.சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், செவி வழி தகவலின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், புழல் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.