சென்னை, ஜூலை 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வந்த பெரிய மேலபாளையத்தைச் சேர்ந்த தோழர் ரமணி (எ) ரவீந்திரன், ஜூலை 10 புதனன்று மதியம் சாலைவிபத்தில் படுகாயமடைந்து அகால மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் டி. ரமணி அவர்களின் இந்த அகால மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் ரமணி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், பவானி பொதுத்தொழிலாளர் சங்க தாலுகா தலை வர், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். வாழையடி வாழையாக வந்த கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரமணியின் தாத்தா, தந்தை, மகன் என மூன்றாவது தலை முறையாக பொதுவுடைமை இயக்கத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி யவர்கள். புதனன்று மதியம் பவானி மகளிர் காவல்நிலையத்தில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் பிரச்சனையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பும்போது தான் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தான் இறக்கும் போதும் கூட மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.