டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவா் எஸ்.பி.வேலுமணி. இவர் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை அவரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமி நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆா்.எஸ். பாரதி, அறப்போா் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேஷ் ஆகியோா் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிா்த்து எஸ்.பி. வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நாளை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டெண்டர் முறைகேடு தொடா்புடைய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது.
மேலும் இந்த வழக்கில் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்க கூடாது என்று எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.