அம்பத்தூர்:
பாதுகாப்புத்துறை தனியார்மயமானால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் எச்சரித்துள்ளார்.படைத்துறை தொழிற்சாலையை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு மாத வேலை நிறுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஆவடி அண்ணாசிலை அருகே மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.சுகுமாறன் பேசியதாவது;
பொதுத்துறையான தொலைத்தொடர்புத்துறையை பிஎஸ்என்எல் நிறுவனம் என மாற்றினார்கள். தொழிலாளர்கள் போராடிய போது, கார்ப்பரேட்மயமானல் வளர்ச்சி ஏற்படும் என்று கூறினார்கள். ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் எவ்வளவு நாள் தாக்குபிடிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதாமாதம் போராடி ஊதியம் பெறக் கூடிய நிலை உள்ளது. ஜியோ நிறுவனம் உள்பட எந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனம் என்றாலும் பி.எஸ்.என்.எல் டவர்களை பயன்படுத்தித்தான் செயல்படுகின்றன. பி.எஸ்.என்.எல். சொத்துக்களை தனியார் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததன் விளைவு அந்த நிறுவனம் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை மற்ற தனியார் நிறுவனங்களுக்கு 4 ஜி சேவையை வழங்கிய மத்திய அரசு தனது சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு வழங்க மறுக்கிறது.அதேபோல் பாதுகாப்புத் துறையும் கார்ப்பரேட் மயமானல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஏற்பட்ட அதே நிலைதான் உருவாகும்.
சேலம் ஸ்டீல், ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு வாங்க காரணம் அவர்கள் தொடர்ந்து அந்த தொழிலை நடத்துவதற்காக அல்ல. அரசுத் துறை நிறுவனத்திற்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்காகத்தான். பாதுகாப்பு துறையின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது. தனியாரிடம் கொடுத்தால் பாதுகாப்பு இருக்குமா? இங்கே உற்பத்தி செய்யக் கூடிய ஒரு டேங்க் எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்பதை தனியார் நிறுவங்கள் அந்நிய நாட்டிடம் கூடுதலாக பணத்தை பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுக்க மாட்டார்களா? தேசத்தின் பாதுகாப்பு என்னவாகும்.
ஆட்டோ மொபைல் துறையில் மட்டுமே 40 லட்சம் பேர் பணியில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை உள்ளது.இதற்கு காரணம் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான். இந்த அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. எனவே மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்றார் அவர்.இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் ஆவடி எச்.வி.எப். தலைவர் ஜெ.முரளிதரன், பொதுச் செயலாளர் கு.ஆடலரசு, ஆர்.மோகனரங்கையா (ஐ.என்.டி.யு.சி), எல்.ரட்சகராஜா (தொமுச), அம்பேத்கர் சங்க பொதுச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோரும் பேசினர். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமி, மணிமேகலை, சு.பால்சாமி, சு.லெனின்சுந்தர், ஏ.ஜி.காசிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ம.பூபாலன் வரவேற்றார்.