tamilnadu

img

உயர்நீதிமன்றம் மதுரை கிளை தனி நீதிபதியின் சனாதானம் குறித்த கருத்து, அரசியல் சாசனத்திற்கும், அறிவியலுக்கும் எதிரானது - தமுஎகச மாநிலக்குழு

உயர்நீதிமன்றம் மதுரை கிளை தனி நீதிபதியின் சனாதானம் குறித்த கருத்து, அரசியல் சாசனத்திற்கும், அறிவியலுக்கும் எதிரானது என தமுஎகச மாநிலக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"சனாதன ஒழிப்பு" எனும் பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை "இந்து மக்களை ஒழிப்பது, இன அழிப்பு செய்வது" என்று திரித்ததோடு, திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரத்தை பரப்பிய அமித் மாளவியா மீது திருச்சி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை ஒட்டி காவல் நிலையத்தால் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதியின் தீர்ப்பு நேற்று ரத்து செய்துள்ளது. அது குறித்தத் தீர்ப்பும், சனாதானம் குறித்த நீதிபதியின் விளக்கமும் அதிர்ச்சியாகவும், அபத்தமாகவும் உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதியின் தீர்ப்பு வெளிவந்துள்ளது. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் முழுக்க முழுக்க வெறுப்புப் பிரச்சாரத்தை மட்டுமே செய்த ஒருவரை வழக்கிலிருந்து விடுவிப்பது சட்டத்தின் மாண்பிற்கு அழகு அல்ல.

சனாதனம் குறித்த ஆழ்ந்த புரிதல் இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில் செயல்படும் உயர் நீதிமன்றக் கிளை வழங்கியுள்ள சனாதானம் குறித்த விளக்கம், ஜனநாயகத்தை நேசிக்கக் கூடியவர்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர்களுக்கும் பெரும் இடியாக உணர முடிகிறது.

சனாதன தர்மம் எனும் பெயரில் வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தக்கூடிய கருத்தானது அனைவரையும் சமம் என்பதை மறுக்கிறது. இதன் பெயரால் சூத்திரர்களும் பெண்களும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுகிறது, கணவனை இழந்த பெண்களுக்கு மறுமண உரிமை மறுக்கப்படுகிறது, கணவர் இறந்தால் மனைவியும் சேர்த்து எரிக்க வேண்டும், அதுதான் சனாதனம் என்பதை திணிக்கிறது. இவ்வாறு பெண்களுக்கு எதிராகவும், சமத்துவத்திற்கு எதிராகவும் பல்வேறு அபத்தமான சட்டங்களை சனாதன தர்மமும், அது முன் மொழியும் வர்ணாசிரமும்  கொண்டுள்ளது. அதற்கு எதிராக அனைவரும் சமம் என்கிற நோகக்கிலேயே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது. அப்படியான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஒருநபர் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதில் சனாதானம் குறித்த விளக்கம் பொருத்தமானதல்ல, அது அரசியல் சாசனத்திற்கே எதிரானது என்று தமுஎகச கருதுகிறது.

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று அறிவிலுக்கு எதிராக பேசும் ஒரு கருதுகோளை சமீப காலங்களில் ஒரு சில நீதிபதிகளே பேசி வருவது கவலை தரும் ஒன்றாக தமுஎகச கருதுகிறது. தொழில்நுட்பமும் அறிவியலும் உச்சத்தை எட்டியுள்ள 21ஆம் நூற்றாண்டில் சனாதனம் குறித்த பிற்போக்கான கருத்தை முன் நிறுத்துவது, மீண்டும் வளர்ந்த சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் செயலாகும்.  இப்படியான தீர்ப்புகளும் அதற்கு உதவக்கூடும் என்று தமுஎகச கவலை கொள்கிறது.