சென்னை, ஏப்.6-தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் (91) வயது மூப்பின் காரணமாக சென் னையில் காலமானார்.சிலம்பொலி செல்லப்பன் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் கிராமத்தில் பிறந்தார். இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். தமிழ் எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்.தமிழுக்கு பல்வேறு வகையில் பெரும் தொண்டு ஆற்றியுள் ளார். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றுள்ளார். இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட் டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் தமிழகத்தின் 3 முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சனிக்கிழமை(ஏப்.6) காலமானார்.
மு.க. ஸ்டாலின்
சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில்,“ தலைவர் கலைஞர் “பொன்னர் சங்கர்” எனும் நெடுங்கதையை எழுதிட துணை புரிந்தவர் சிலம்பொலியார். சிலம்பொலியார் திராவிட இயக்கப் பற்று மிக்கவர்; பகுத்தறிவு, சுயமரியாதையை போற்றியவர். சிலம்புச் செல்வரையும், சிலம்பொலியாரையும் தமிழ் உலகம் என்றும் மறக்காது” என்று கூறியுள்ளார்.சிலம்பொலிச் செல்லப்பன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.